Monday, March 30, 2015

21ஆம் நூற்றாண்டில் பொன்னியின் செல்வன்


"நம் நாடு நம் நாடு" என பலர் குரலெழுப்ப
"எக்கேடோ கெட்டுப்போ"வென ஆங்கிலேயர்
விட்டெறிந்து சென்ற நாட்டை
"விட்டேனா பார்" என சில ஒல்லிக் கூட்டம்
குண்டு வீசி தகர்க்க முயல - தெற்கேயும்
"விட்டேனா பார்" என்று காவிரியை சொந்தம் கொண்டாடி,
கொண்டாட்டத்தைக் கொள்ளை கொண்டுள்ள காட்சியை
காவிரி மைந்தன் பொன்னியின் செல்வன் மட்டும்
கண்டிருந்தால்...
கண்டராதித்தரின் வம்சம்
கண்டோரெல்லாம் இழித்துக்
கிண்டலாய்ப் போனாலும் சரிதான் எனக்
கொண்டவன்போல் அன்றே சோழத்தைக்
கந்தல் கந்தலாய்க் கிழித்திருப்பான்
கந்தமாறன் துணையோடு

இப்பொழுது இங்குள்ள
நச்சு நாக்கு இனியர்களும்
குந்தவைகளை ஓரமாகக்
குந்த வைத்து,
நந்தினிக்களை நாடிச் சென்று
Common Manகளையும்
காமன் மிருகங்களாய் மாற்றி
அவள் வசம் லயித்திருக்கச் செய்வார்


பெண்மணிகளும் நந்தினிப் பேய் பிடித்து
கண்மணிபோல் பூத்திருந்த காதலைக்
காமக் கணையால் களைந்து
காமாந்தகனாய்க் காதலனை
மாற்றிவிட வேண்டுமென
மாறி மாறிப் பேசி எம்மாதமும்
மாரி வந்திடாதபடி வழி செய்தார் - இக்கீழ்நிலை
மாறிடாதபடி பழி செய்தார்


வந்தியத் தேவர்களும்
இந்திய நாட்டிற்குத் தாங்கள்
சிந்திய வேர்வைகள் சரிதானோவென்பதைச்
சிந்திக்கத் தெரியாமல்
சிந்திக்கத் தெரிந்த தங்கள்
குந்தவைகளச் சந்திக்கத் தேடி
வந்து பார்த்து,
சிந்தனைகள் செத்துப்போன
குந்தைவைகளின் நிலைகண்டு
நொந்து போவார்கள்
வந்தவரும் தேவர்களைப் பார்த்து
இந்நிலையின் காரணமறிய
ஏந்திய ஆயுதங்களுடன்
விந்திய மலைகளும் தாண்டிச் சென்று
இந்தியவிற்காகப் போர் முனையில்
பந்தையம் வைப்பர்தம் உயிரை

ஆழ்வார்க்கு அடியானும் தன்
தடியினைத் தலைமேற் சுழற்றி
நாரணன் இல்லையென்ற
நாத்திகரின் தலையினில்
இடியினைப் போட்டிருப்பான், பின்பு
நாச வேலைகள் செய்யும்
நாராச ஆத்திகர்கள்
நாரணன் பேர் சொல்லி
நரகாசுரன் போல் நடப்பதைக் கண்டு
அந்தத் தடியனே தன் தடியால் தன்
முன்குடுமித் தலையின்
பின்மண்டைப் பிளக்குமாறு அடித்து
தன் நாரணன் அடி சேர்ந்து
நடந்த தவறின் அரிய காரணத்தை
ஹரியிடம் அறிய முயல்வான்


கடையேழு வள்ளல்போல் 
கடைந்தெடுத்த ஒரு சிலரே 
வடவாற்றங்கரையோரம் 
தலைக்கிரண்டு கடை வைத்து 
தம் குடைக்குள்ளே பொருள் சேர்த்து
கோழியைப்போல் அடைகாத்து
மலை மலையாய்ச் சேர்த்த பொருள்கொண்டு 
பதினாறும் பெற்று அவர்மட்டும் வாழ்வரே!