Tuesday, November 10, 2015

மோகனரங்கருடன் ஒரு நாள்


மோகனரங்கர் ஒரு சிறந்த நாடகக் கலைஞர். நாடக உலகின் உச்சாணிக்கொம்பில் ஆணியடித்தாற்போல் வீற்றிருப்பவர். அவருக்குப் போட்டியாய் வர கொம்புசீவிப் புறப்பட்ட காளையர்கள் உச்சியில் ஆணியாலடித்தாற்போல் அலறியோடினர்.
அவரைப் பலமுறை சந்திக்கத் தனியொருவனாய் முயன்றிருக்கிறேன். அந்த பலமுறையில் ஒருமுறைகூட பலனளிக்கும் முறையாக அமையவில்லை.

இப்படி முக்தி பெறாமல் என் பக்தியிருக்க , விரக்தியாய் வீட்டிலிருந்த புளி சாதத்தின் வாடை தாங்காமல், 'புலி பசித்தாலும் இந்தப் புளியன்சோற்றைத்   திங்காது' என்று கர்ஜித்துவிட்டு, கையேந்தி பவனில் கையேந்தி நின்றேன்.  அங்கு மோகனரங்கர் மாயா பஜார் கடோத்கஜனாகவே மாறி ஒருபிடிபிடித்துக்கொண்டிருந்தார். இதுதான் சமயமென, "சார் இன்னும் ஒரு வடை வேணுமா?" என்று காக்கா பிடித்தேன். படையலை ஏற்கும் கடவுளாக நான் பாவிக்கும் அவர், தலையசைத்து இவ்வடையலையும் ஏற்றருளினார்.

இம்முறை துணிந்து, "உங்களோட கொஞ்சம் உரையாடனும் சார்." என்றேன்.
"என்னோட பேசறதெல்லாம் உரையாடலா இருக்காது. ஒரேயாடலாதான் இருக்கும். நான்மட்டும்தான் பேசிண்டிருப்பேன். சரி நாளைக்கு வா" என்று சொல்லிமுடித்தபின் தலைகாலென்ன, என் முழு தலையில் கால்வாசிகூட  களிப்பினால் செயற்பாடற்று இருந்ததைச் சொல்லவும் வேண்டுமோ?

ஆவலுடன் எனது மானஸ்ய குருவும் மன-ஹாஸ்ய குருவுமான மோகனரங்கரைக் காணச் சென்றேன்.
புன்முறுவலுடன் என்னை அண்ணலும் நோக்கினார் , நானும் நோக்கினேன். பின்புதான் உணர்ந்தேன்.
அது புன்முறுவலல்ல, பான்முறுவலென்று . Pan masalaவால் உதடுகள் ஜொலிக்க, "வாடா வா" என்ற வரவேற்பில் பன்னீராய் பான்-நீரைத் தெளித்தார்.

"என்னடா நரைமுடி? அதுக்குள்ளயா?"

"பித்த நரை சார்"

"என்னப்பா இருபதுலேயே பித்த நரையா? எதுக்கும் கல்யாணம் பண்ணிக்காம இரு."

"ஏன் சார் இப்படி சொல்றீங்க?"

"பித்த நரைக்கே இவளோ வெள்ளைனா, பெத்த நரை வந்தா சுண்ணாம்புல முங்கினாப்ல ஆயிடும்."

வாய் சொன்னதை மெய்யுணர்ந்து, கை சுண்ணாம்பு டப்பாவை எடுத்து, வாயில் சற்றே அதைபோட, மெய்மறந்து வாய் அசைபோட,  இப்படி வாயும் மெய்யும் ஒன்றிணைந்து இருப்பதையே 'வாய்மை' என்று சான்றோர் குறிப்பிட்டார்களோ என்றுகூடத் தோன்றியது.

நாற்காலியில் என்னை அமரச் சொல்லிவிட்டு நாலு கால் பாய்ச்சலில் சமையலறைக்குள் சென்றார். அந்த அறையில் ஒரு ஓரமாக முதியவரொருவர் படுத்துக்கொண்டு தொலைகாட்சியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் பள்ளிகொண்ட பெருமாள், பள்ளிப் பரீட்சைக்கு புறப்படும் பையன் போல விருக்கென்று எழுந்தார்.

"கிரிக்கெட் பாப்பியோ?"

"முன்னாடி பாத்தேன். இப்போலாம் கிரி'கெட்டு'ப் போச்சு. பாக்கறத நிறுத்திட்டேன்." என்ற உண்மையை சொன்னேன்.

"சரி டென்னிஸாவது பாப்பியா?"

"அப்போ அப்போ."

"யாரைப் பிடிக்கும்? பெட்ரா க்விடோவா வா? இல்ல மரியா ஷரபோவா வா?"

"ராம்விலாஸ் பால்கோவா" என்று மறுபடியும் உண்மையை உளற, கோபமாக திரும்பியவர் அறை மூலையில் நெளிந்து கொண்டிருந்த ஒரு புழுவை என்னைப் பார்ப்பது போல் பார்த்தார்.

நானும் சற்றே தூண்டிலில் கோர்த்த புழுபோல நெளியத் தொடங்கினேன். மச்சாவதாரம் எடுத்து புழுவைக் கவ்வும் மீனாய் வந்து என் நெளியளைத் தீர்த்தார் மோகனரங்கர். புளிசாதத்தை ஒதுக்கித்தள்ளிய இந்த புலிக்கு டைகர் பிஸ்கட் கொடுத்தார்.

அவரிடம் "யார் சார் இவர்?" என்று வினவினேன்.

"என்னோட சித்தப்பா. வயசானாலும் மனசளவுல இன்னும் குழந்தை மாதிரி"

"அப்போ சித்தப்பாப்பானு சொல்லுங்க."

சற்றே அதிர்ந்தவராய் என்னைப் பார்த்து, "அவர் மகாஞானி. சித்தயோகமெல்லாம் இவருக்கு அத்துப்படி. நாங்கலாம் இவர சித்தப்பானே கூப்பிடமட்டோம். சித்தர்பானுதான் சொல்லுவோம். சித்தர்பானு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது சித்தர்கள் பத்தி நான் எழுதியிருக்குற வெண்பாலாம் படிச்சிருக்கியா?"

"படிச்சிருக்கேன் சார்" என்று இந்த புழு புளுவ, 'எங்கே ஒன்னு சொல்லு பாப்போம்' என்று அவர் கேட்டதும் திருவிளையாடல் தருமிபோல் திருதிருவென முழித்தேன்.

பின்பு "எனக்கு மறதி கொஞ்சம் ஜாஸ்தி" என்று சமாளித்தேன்.

"சரி சரி நீ ஒரு வெண்பா சொல்லு பாப்போம்." என்று என்னை மீண்டும் சோதிக்க, நானும் என் ராசியை நம்பி மச்ச-அவதாரம் எடுத்தேன். அதிலும் சாதாரண மச்ச-அவதாரம் அன்று. மாங்காய்மச்ச-அவதாரம்.

"சூப்பைக் குடித்தால் தொண்டைச்சளி நீங்குமென
டூப்பை விட்டும் வாங்காமல் - மூப்பை
எய்திய பாட்டனார் செயலினால் மும்மாரிப்
பெய்திடும் கண்ணிலே மழை"

என்று என் தாத்தா எனக்கு சூப் வாங்கித் தராமல் இருந்த பாவத்தை, பாவாகக் கொட்டினேன். பெருமையுடன் நான் வெண்பா சொன்னதும் அவர் முகம் மாறுவதைப் பார்த்து நான் எடுத்தது 'மாங்காய்மச்ச-அவதாரம்' அல்ல 'மாங்காய் மடைய - மச்சாவதாரம்' என்று உணர்ந்தேன்.

"நீ சொன்னதுல இலக்கணமே சரியில்லையே. நேர் நேர் தேமா விதி எல்லாம் தெரியுமா உனக்கு?" என்று ஆவேசப்பட்டார்.

தேமேஎன்று They may do it  என இருக்கும் என்னிடம் தேமா விதிகளைப் பற்றிக் கேட்டால் என்ன தெரியும். தேம்பி அழாக்குறையாக தெரியாது என்றேன்.

"வெண்பா எழுதறதைத் தொழிலா எடுத்துக்காத. அப்புறம் விஷயம் தெரிஞ்சவன் 'இது புதுவகையான பாவகைனு கிண்டலடிப்பான்."

"அது என்ன வகை?" என்று கேட்டு வகையாக நான் மாட்டிக்கொள்ள,

"சரியா இருந்தா வெண்பா, இப்படியிருந்தா 'இதெல்லாம் ஒரு பிழைப்'பா' ?"

"மன்னிக்கனும் சார்" என்று நான் மன்றாட, என்னைப் பலி போடாமல், பலிக்குப் பாடம் புகட்டிய வாமணன்போல், என் பா பொறுத்து, களங்கமுற்ற என்பாக்களை, துவைத்தெடுத்து வெண்பாவாக்கினார்.

சற்று நேரத்துக்கெல்லாம் டைகர் பிஸ்கட்டும் தீர்ந்துவிடவே, "அடிக்கடி வந்துட்டு போ. எனக்கும் கொஞ்சம் பொழுது போகும்." என்று நான் அவரை அவ்வப்போது எதிரில் பார்த்திடும் எதிர்பாரா வரத்தையும் அருளினார்.

இந்த இனிய நாளில் அவர் பேசிய ஒவ்வொரு சொல்லையும் மனதில் அசைபோட்டுக்கொண்டு வீட்டுக்குப் பொடி நடையாகவே நடக்க ஆரம்பித்தேன். வலிமையான எதிர்காலம் எனக்கிருக்கிறதென்று நினைத்த மாத்திரத்தில், பின்னே சைக்கிளில் வந்த ஒருவன் என்மீது மோதினான். அவனோ 'நான்தான் சரியாக நடக்கவில்லை' என்பதுபோல் என்னைத் திட்டத் தொடங்கினான்.

"பரதேசி. வூட்டுல சொல்லிகினு வந்தியா? ரோட்டுல கண்ண வக்காம சீன போட்டுகுனே போவ உன் அப்பன் வூட்டு ரோடா இது. ஒய்ங்கா வூடுபோய் சேரு. கஸ்மாலம்." என்று சற்று நேரத்திற்குமுன் செந்தமிழில் திளைத்த என்னைச் சென்னைத்தமிழில் திகைக்க வைத்தான்.

அந்தப் பாவியின் பாவத்தையும் (இன்னும் பாப்  பிழையிலிருந்து மீளாமல்) 'நீயென்ன பெரிய பருப்பா'வாக அவன் காதில் விழாத அளவு உரக்கக் கத்தினேன் பின்வருமாறு.

"தோடா கஸ்மாலம் பின்னிடுவேன் திரும்பாமப்
போடா வேலையப் பாத்துட்டென - சோடா
பாட்டிலுடன் கூவிடுவர் பிழையினின்று பிழைக்கச்
சூட்டிகையாய் சொல்லும் சொல்"

எனது மானஸ்ய குருவும் மன-ஹாஸ்ய குருவுமான கிரேசி மோகன் அவர்களுக்குச் சமர்ப்பணம்