இக்காலத்தில் ஜனரஞ்சகம் என்ற சொல் வெகுவாக பயன்படுவதை நாம் காணலாம்.
அதன் பொருளை பலர் தவறாகத்தான் புரிந்துகொண்டுள்ளார்கள்.
மக்களுக்குப் பிடிக்கின்ற விஷயங்களைச் செய்வதுதான் ஜனரஞ்சகம் என்ற கருத்து பரவியுள்ளது.
உண்மையில் அதுவல்ல ஜனரஞ்சகம் என்பது.
தனக்கு பிடித்தமான ஒரு விஷயத்தை மக்களுக்கு ஏற்றவாரு அமைத்து, அவர்களும் ரசிக்கும் வண்ணம் செய்வதே ஜனரஞ்சகமாகும்.
மேற்கூறிய கருத்து புரியவில்லையானால் திரு. டி. எஸ். பாலகிருஷ்ண ஸாஸ்த்ரிகளின் கதைகளைக் கேட்டால் நான் சொல்ல முனைந்தது உங்களுக்குப் பிடிபடும்.
ஹரிகதை சொல்வதர்க்கு வெறும் கதையும் பாட்டும் தெரிந்தால்மட்டும் போதாது. நல்ல சாரீரமும் வேத ஸாஸ்திரங்களில் நல்ல பாண்டித்யமும் பல மொழிகளில் நல்ல பரீட்சயமும் இருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாது முன்னர் சொன்னதுபோல் ஜனரஞ்சகமாகவும், அதாவது, தான் சொல்ல முனைந்த விஷயத்தை தெளிவாகவும், பக்தியுடனும், கேட்பவர் சோர்வடயாதிருக்க அவ்வப்போது கேளிக்கைகளும் கூறுவது அவசியம். இவை அனைத்தும் பூரணமாக இவரிடத்தில் இருந்தது என்பதை கேட்டவர்கள் உணர்ந்திருக்கக்கூடும்.
படம் பார்த்தால் எப்படி காட்சிகள் நம்முன் திரையில் தெரிகிறதோ அதேபோல் இவரது கதைகளை நாம் கேட்கும்போது காட்சிகள் நம்முன் தோன்றும். இவர் Voice Modulation Techniques மூலம் கதை சொல்வதால், நாம் கதைதான் கேட்கிறோமா? இல்லை நாடகம் பார்க்கிறோமா? என்ற சந்தேகம் நமக்கு எழும்.
தியாகராஜரின் பாடல்களைத் தொகுத்து, முழுநீள இராமாயணமாக அதனை ஹரிகதை செய்து, இராமாயணமட்டுமல்லாமல் தியாகராஜரின் பெருமையையும் மக்களுக்கு எடுத்துச் சென்றது இவரது சிறப்பாகும்.
கர்நாடக சங்கீதத்தில் ‘பொறுத்தம் வைத்துப் பாடுவது’ என்று ஒரு விஷயத்தை நாம் அறிந்திருப்போம்.
ஆனால் ‘பொருத்தத்துடன் பாடுவது’ என்பதற்கு இவர் ஒரு தலை சிறந்த முன்னோடி என்று கூறினால் அது மிகையாகாது. இப்படி தியாகராஜர் கீர்த்தனைகளை இராமாயணத்துடன் பொருத்திப்பாடிய இவரது திறனை நாம்
என்னவென்று பாராட்டுவது?.
இக்கட்டுரையில் நான் கேட்டு ரசித்த ‘இவரது’ கதையோடு என் கதையையும் சேர்த்து ‘விடுகிறேன்’.
சொற்குற்றமோ பொருட்குற்றமோ இருப்பின் அதனைப் பொறுத்துக்கொண்டு, நிச்சயம் அதைத் திருத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கதைக்குச் செல்வோம்.
-------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை.
“அனுமான் சீதையைத் தேடிக்கொண்டு வருகிறார். அங்கு காவலிருந்த லங்கினியை வதம் செய்துவிட்டுத் தன் தேடலைத் தொடங்கினார். தெருக்கள், மாளிகைகள், நந்தவனங்களென அனைத்து இடங்களிலும் தேடித் திரிந்தார்.
மனதிற்குள் எண்ண அலைகள் ஓடத் தொடங்கின.....”
“அங்கு வானரங்களும், என் சுவாமியும் என்னுடைய வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். நான் புறப்படும்போது மிகவும் பெருமையாகயிருந்தேன். தேவியை நான் ஒருவனே கண்டுபிடிக்கப் போகிறேன் என்ற பெருமை. ஆனால் வெகு நேரம் தேடியும் காணவில்லையே. என்ன செய்யப்போகிறேனோ!!” என்று சோகமாக இருந்தார்.
ஒரு சோகம் வந்தால் கூடவே பல சோகங்கள் வருவது இயற்கைதானே.
வயதான ஒருவருக்கு பென்ஷன் பணம் வரவில்லையென்றால், அந்த சோகம் மட்டுமா இருக்கும்?. “நான் அங்க எவ்வளவு நாள் வேலைப் பார்த்தேன். முதல்ல அங்க நான் சேர்ந்திருக்கவே கூடாது. அட போங்கோ சார், என்
பிள்ளை வேற அமேரிக்காவுல இருக்கான். கூட இருந்தாலாவது நல்லாயிருந்திருக்கும். எல்லாம் என் தலையெழுத்து சார்.” என்று பல சோகங்களும் உடன் சேர்ந்துகொள்ளும் அல்லவா.
அதேபோல்தான் அனுமானுக்கும்.
“துணைக்குக் கூடயாரையாவது கூட்டிண்டு வந்திருந்தால் சற்று நன்றாக இருந்திருக்கும். கொஞ்சம் பேச்சுத் துணைக்காவது ஆளிருந்திருக்கும்.” என்று சோகம் மேலும் ஏறியது. அப்போது திடீரென்று “ஆஞ்ஜநேயா” என்ற
குரல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பியவருக்குப் பெரிய ஆச்சரியம்.
” என்று கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த இளம் பாகவதர்.
“அட என்ன சாமி சொல்ற? அனுமான அமுக்கிடாங்களா?” என்ற கேள்வி என்னைக் கதையிலிருந்து வெளிக்கொண்டு வந்தது.
இலங்கையிலிருந்து மெட்ராசுக்கு வந்தேன்.
கதையைச் சொல்லிக்கொண்டிருந்த இளம் பாகவதரும் சற்று திடுக்கிட்டுப் போனார்.
“இல்லை இல்லை” என்று அவர் சொன்ன பின்புதான் அந்தக் கேள்வியின் நாயகன் முகம் சாந்தமடைந்தது.
பாகவதர் தொடர்ந்தார், “பார்த்தால் யாரு? நம்ம திருவையாறு.”
ஒருவர் கெள்வி கேட்டால், அடுத்தடுத்து பலருக்கு தைரியம் வந்து பல கேள்விகள் எழுவது சகஜம்தானே.
“அது யாரது திருவையாறு?”
“திருவையாறுன்னு நான் திருவையாறு தியாகராஜரைத்தான் சொன்னேன். இவர் ஸ்ரீராமர்மீது நிறைய பாடல்கள் பாடியிருக்கார்.”
“அட என்ன சாமி கதை உடற. அவரு எப்படி அங்க?”
“கதைதான். இது நானே தயாரிச்ச ஒருவகையான இராமாயணம். பொறுமையாக் கேளுங்கோ” என்றார் பாகவதர்.
------------------------------------------------------------------------------
ஹரிகதைகள் ஓரளவு பிரபலமாகயிருந்த காலகட்டம்தான் அது. இருப்பினும் அனைத்து கதைகளும் பெரிய சபைகளிலும், சமாஜங்களிலும்தான் நடைபெறும். சேரிக்குச் சென்று யாரேனும் கதை சொல்வார்களா என்று எதிர்பார்ப்பதைவிட, ஹரியானா லாட்டரியில் கோடி ரூபாய் பரிசு விழும் என்று எதிர்பார்ப்பது சாலச்சிறந்தது.
அதிலும் அந்த பாகவதர் ஓர் இளைஞன். வயது முதிர்ந்தவர்களே “வேறு வேலையில்லை போ” என்று
அறியாமையில் கூறிக் கொண்டிருக்கும்போது, ஓர் இளைஞன் கதை சொல்ல வந்தது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இரண்டு தினங்களுக்கு முன்புதான் எங்கள் தெருக்களில் ராமநவமியை முன்னிட்டு ஹரிகதை சொல்லப்போவதாக
அறிவிக்கப்பட்டது. இதுவரை எங்களிடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததேயில்லை. பொதுவாக இதுபோன்ற தினங்களில் கலாட்டாக்கள் ஏதும் வராமலிருந்தாலே பெரிய விஷயம்தான். ஆனால் இப்போது எங்கள் ஊரிலும் ஹரிகதை. ஒருசிலர் இதெல்லாம் நமக்கில்லை என்று ஒதுங்கிக் கொண்டாலும், பலர் அந்த ஒரு நாளாவது நல்ல விஷயத்தைக் கேட்போம் என்றெண்ணி வர முனைந்தனர்.
அன்றைய தினம் வந்தது.
“ஹரிகதை - சுந்தர காண்டம்” என்று ஒரு பலகையில் எழுதப்பட்டிருந்தது.
கூட்டமும் நன்றாகக் கூடியது.
------------------------------------------------------------------------------------------------
அங்கு......
தன் நண்பனான ஜெகந்நாத முதலியார் காரில் இவரது வீட்டருகே காத்துக்கொண்டிருந்தார்.
தன் மாமனாரிடம் ஆசிபெற்றுச் செல்லும்போது, “நன்னா யோசிச்சுண்டியா? அந்த இடத்துலயெல்லாம் போய் கதை
சொன்னா அடிவாங்கிண்டுதான் வரப்பொறே பாத்துக்கோ” என்றார்.
ஒருவித மனதைரியத்துடன் “நான் பாத்துக்கறேன் கவலைப்படாதீங்கோ” என்று சொல்லி ஆசிபெற்று புறப்பட்டான்.
முதலியாரின் காரில் ஏறி அமர்ந்தவுடன் அவர், “அவசியம் போய்தான் ஆகணுமா?” என்றார்.
“நிச்சயமாப் போறோம். வண்டியை எடுங்கோ.”
முதலியார் நல்ல பயில்வான்போன்ற தோற்றமுடையவர். ஆனால் மிகுந்த பயமுள்ளவர். இருப்பினும் நல்ல இசை ரசிகர்.
“நீங்கமட்டும் சம்மதிச்சா பெரிய பெரிய சபாக்களிலே கதை சொல்லலாம். இப்படி இவாகிட்டெல்லாம்
கதைசொல்லப்போறது உங்களுக்கே நன்னாயிருக்கா?”
அவரிடம், “ஆசிரியர் என்பவர் யார்?” என்று கேட்டார்.
“பாடம் சொல்லித் தருபவர்.”
“ஏற்கனவே நன்னாப் படிக்கின்ற பையனுக்குப் பாடம் சொல்லித்தருவது பெரியதா? இல்லை படிப்பே ஏறாத
ஒருத்தனுக்கு பாடத்தைத் தெளிய வைப்பது பெரியதா?”
“இரண்டாவதுதான்”
“நானும் அப்படி இருக்கத்தான் விரும்பறேன். ஏற்கனவே இராமாயணமும் தியாகராஜரையும் பற்றி தெரிந்தவரிடத்தில் சொல்வதைவிட, சேரி மக்களிடமும் இவர்களின் பெருமையைப் புரிய வைப்பதையே நான் பெரிய சேவையாகக் கருதுகிறேன். இப்ப என்ன சொல்றீர்?”
“நான் என்னத்த சொல்றது. உங்க இஷ்டம்போல செய்யுங்க. அங்க முதல்ல கூட்டம் வருதா பாரும்”
‘உண்மைதான். நான் என்னமோ ஜம்பமாக் கிளம்பிட்டேன். ஆனால் அங்க யாரும் வரலைன்னா என் எண்ணங்கள் முழுதும் வீணாகிடுமே’ என்று கலங்கினான். இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
“இராமர் சரணாகதி ஸாஸ்திரம் பற்றி எல்லாருக்கும் சொல்லும்போது, அதோட தத்துவத்த ஆஞ்ஜனேயர்மட்டும்தான் புரிஞ்சிண்டார்.” என்று சமாளித்தார்.
“ஆமாம் நீங்கதான் போய் பாத்தேளாக்கும்?”
“நான் ஒண்ணும் சொல்லலை. தியாகராஜர்தான்,
‘வாதாத்மஜா துலசெந்தனே - வாரின்சி நானி பலுகுலெல்ல
ஸீதாபதி நாமனசுனா சித்தாந்தமனியுன்னாரா’ அப்படின்னு பாடிருக்காரே.
அதுபோலதான் அங்க யாரும் இருந்து கேட்கலன்னாலும், கேட்க நீங்க போதுமே” என்று சற்றே அவரைப் பெருமைப்படுத்திக் கூறியதும் தன் புலம்பல்களை நிறுத்திக் கொண்டார் முதலியார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
எங்கள் இடத்திற்கு கார் வந்தது. கூட்டத்தைப் பார்த்ததும் குதூகலமானார் பாகவதர்.
முதலியார் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டார்.
பாகவதரும் கதையை ஆரம்பித்தார்.
அனுமான் துணைக்கு (முன்னர் சொன்னதுபோல்) ஆளில்லையே என்று வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கும்போது “ஆஞ்ஜனேயா” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தார்.
அங்கே தியாகராஜர் நின்றுகொண்டிருந்தார்.
“உங்களுக்குத் தெரியாததா” என்று சொல்லி பாடத் தொடங்கினார்.
‘மா - அப்பராம பக்தி எந்தோகொப்பரா’
என்று அவருடைய வெண்கல குரலில் பாடத்துவங்கியதும், அனைவருமே மெய் மறந்துவிட்டோம்.
(இருப்பினும் அவர் அதற்கு பொருளைக்கூறி மறுபடியும் பாடும்பொழுதுதான் என்ன அழகாக தியாகரஜர் பாடியிருக்கிறார் என்பது புரிந்தது.)
“அவ்வளவு பெரிசான ராமபக்தியைவிட வேறு துணை வேணுமா? மனதைக் குழப்பிக்காம வந்த வேலையைப் பாருங்கோ” என்றதும் கலக்கம் தீர்ந்து செயலில் முற்பட்டார் அனுமான்.
பின்பு அனுமானின் ஒவ்வொரு செயலுக்கும், தன் வாழ்வினில் நடந்த சம்பவங்களைக் கூறி எங்களைச் சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்தார். பக்தி மார்கத்தை எங்களுக்கு(ம்) காட்டினார்.
கதை முடிந்ததும் பலத்த கரகோஷம் எழுந்தது.
நாங்களும் எழுந்து அவரை வணங்கினோம்.
தயங்கியபடியே அவரிடம் சென்று,
“மறுபடியும் எப்போ சாமி வருவீங்க?”
“நிச்சயம் கூடிய சீக்கிரம் வருவேன்.. என்ன முதலியார், சரிதானே?” என்று அவர் நண்பரைப் பார்த்தார்.
முதலியாரும் ஆம் என்பதுபோல் தலையை ஆட்டினார்.
பின்பு எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு, இருவரும் காரில் சென்றனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
காரில்....
“இன்னிக்கி கதை எப்படி?”
“அவா பாஷைல சொல்லணும்னா - சோடா பாட்டிலை உடைச்சது மாதிரி சொல்லிடேள் போங்கோ..”
“ஹா ஹா ஹா... சரி இப்ப என்ன சொல்றீர் மறுபடியும் இங்க வரலாமா?”
“நிச்சயமா வரணும். நீங்க சொன்னதுபோல இவாகிட்டயும் சொன்னால்தான் உண்மையான பலன் இருக்கும்” என்றார் முதலியார்.
புன்முறுவலுடன் தன் அடுத்த கதையை ‘ஜனரஞ்ஜகமாக’ எப்படி சொல்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார் நம் பாலகிருஷ்ண ஸாஸ்த்ரிகள்.
இவருடைய கதைகளை அனைவரும் கேட்டு, மனதை நல்வழிப் படுத்த வேண்டும் என்பதே என்னுடைய அவா.
PS - Many dialogues in this article are just a "copy - paste matter" from TS Balakrishna Sastrigal's Thyagaraja Ramayanam, including the 'soda bottle' comment. I just have compiled all those dialogues in an orderly way, just like what TSB did to Thyagaraja's Krithis ;-).
உமது எழுத்தும் ஜனரஞ்சகமாக இருக்கிறது
ReplyDeleteவாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரஞ்ஜனி அக்கா!!! :-)
DeleteAwesome... loved reading it and is truly ஜனரஞ்சகம் !!!
ReplyDeleteThank you sir :)
Delete